Tuesday, November 9, 2010

நீள்கூந்தலும் நிலந்தேய ஆடைகளும்

தர்மினி

நன்றி: www.thoomai.wordpress.com



இன்று வரை தமது கலாச்சாரப் பண்பாட்டுப் பிரதிநிதிகளாகப் பெண்களை வைத்திருப்பது, ஆண்களுக்கும் , அதிகாரத்திற்கும் வசதியாகவேயுள்ளது. நீள்கூந்தலும் நிலந்தேய உடைகளுமாக நடமாட நம் போலித்தனமான சுற்றம் வெருட்டுகின்றது.

கலாச்சாரக் காவிகளாகப் பெண்கள் மட்டுமே உடையலங்காரம், தலையலங்காரம், பண்பாடு என்ற பெயரில் பழமை பேணுதல் , பாசாங்கான புறவடையாளங்கள், அச்சமூகத்தின் பிரதிநிதிகளாகப் பெண்கள் இருக்கவேண்டுமெனக் கதைத்தல்கள், கட்டளைகள் என்று மதம், குடும்பங்களினூடாக வற்புறுத்தப் படுகின்றது.

பிரித்தானியக் காலனியின் கீழ் படிப்பு, பதவி , நாகரிகம் என்பவற்றைக் காரணங்களாகக் கொண்டு உடைகள் ,தலையலங்காரம் ,காலணிகளை ஆண்கள் மாற்றிக் கொண்டதைப் போல பெண்கள் நவீனத்துவத்தைக் கடைப்பிடிக்க சமூகம் விடவில்லை. இன்று வரை தமது கலாச்சாரப் பண்பாட்டுப் பிரதிநிதிகளாகப் பெண்களை வைத்திருப்பது, ஆண்களுக்கும் அதிகாரத்திற்கும் வசதியாகவேயுள்ளது. நீள்கூந்தலும் நிலந்தேய உடைகளுமாக நடமாட நம் போலித்தனமான சுற்றம் வெருட்டுகின்றது. காலமாற்றத்திற்கும் காலநிலைகளுக்கும் மாறிக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயங்கள் கூட புலம் பெயர்ந்து மற்றைய சமூகத்தினருடன் கலந்து வாழும் போதும், தாய்நாட்டில் வாழும் போதும் ஏற்பட்டாலும் கடவுளை மறுக்க நடுங்கும் மிரட்சி போல, பழகி விட்ட ஒன்றை விட்டுவிடுதலில் தோன்றும் பூதம் தின்று விடும் என்ற சின்னப்பிள்ளைத் தனமான பயத்தைப் போன்றததுமாகும். தங்களுக்குக் கொஞ்சங் கூடப் பிரயோசனம் அற்றதும் வீண்வேலைகள் என அறிந்தும் இவர்கள் அவற்றைப் பின்பற்றுகின்றனர்.

சமீபத்தில், இந்துசமயத்தையும்-பண்பாடு கலாச்சாரத்தையும் போலி யாழ்ப்பாணக் கலாச்சாரக் காவலாளர்களும் சட்டம் போட்டுக் காப்பாற்றும் வரலாற்றுக் கடமையைச் செய்கிறார்கள். இந்த ஆக்கம் அதைப்பற்றிப் பேசாமல் அதைத் தொட்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் போலிக் கலாச்சார மினக்கெடல்கள் பற்றிக் கொஞ்சம் கதைப்பதாக இருக்கும்.

உண்மையாகவே மனமகிழ்வை அளிக்கும் செயல்களிலோ உடலைப் பேண உதவும் உடைகளிலோ ஈடுபாடு காட்டாமல் வெற்றுச் சம்பிரதாயங்கள் , சடங்குகள், பழக்கவழக்கங்களைக் காவிக் கொண்டு வந்து புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நேரம், பணம்,சக்தி என்பவற்றை விரயஞ் செய்கின்றனர் தமிழர்கள். இவர்கள் மற்றைய சமூகத்தினரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளத் தம் பாரம்பரியக் கலைகள் எதையும் கைவசம் வைத்திருப்பதில்லை. இங்கு பிறந்து வளரும் தமிழ்ச் சமூகத்துக்குக் கற்பிக்கும் இசை,நடனம், கவின்கலைக் கருவிகள் கூட ஒருவருக்கொருவர் கௌரவப் பிரச்சனை, போட்டி மனப்பான்மையுடன் தம் பிள்ளைகளுக்குக் கற்பித்தலிலும் ஒரு அரங்கேற்றத்துடனும் முற்றுப் பெற்று விடுகின்றன. அவற்றை உள் வாங்கி வெளிப்படுத்த முடிவதில்லை.

அவர்களை
விட்டுவிட்டால் புலம் பெயர்ந்து வாழத் தொடங்கிய முதற் தலைமுறையினர் எங்காவது ஒரு சமூக ஒன்று கூடலில் தங்களுடைய நாட்டுக் கலை என எதையும் நிகழ்த்த முடியாமல் திண்டாடி நிற்பதைப் பார்க்கலாம். ஆனால் தமிழர், தமிழ்க் கலாச்சாரம் ,பண்பாடு என வெறும் பேய்க்காட்டல்களை வைத்துக் காலந்தள்ளிக் கொண்டிருப்பது பற்றிச் சற்றும் வெட்கப் படுவதில்லை.
சமீபத்தில் நடைபெற்ற பல சமூகத்தினருக்குமான கலைகலாச்சார ஒன்றுகூடலில் நடைபெற்ற சம்பவமொன்று.

ஒவ்வொரு நாட்டவர்களிலும் யாராவது ஒருவர் நமக்குப் புதியதாக இருக்கும் அவர்களது பாரம்பரியப் பாடலைப் பாடினார்.தாளலயம் மிகுந்த இசையும் ,குழுக்களாக அவர்களது தனித்துவமிக்க நடனங்களும் எல்லோராலும் இரசிக்கப் பட்டது. தமிழர்களின் முறை வந்த போது பிறநாட்டவரைப் போன்ற பாரம்பரியப் பாடல்களையோ நடனத்தையோ வெளிப்படுத்தவில்லை. கைவிரல்களினால் எண்ணக் கூடிய அளவிலேயே நம் நாட்டார்பாடல்களையும் கூத்தையும் இசைக்கக் கூடியவர்கள் புலம்பெயர்ந்தவர்களுக்கிடையில் இருக்கக் கூடும். ஏனைய சனங்களுக்கு அக்கலைகள் எதுவும் தெரியாது. அவர்கள் காவிக் கொண்டு வந்தவை ; சாறி, சாமத்தியச் சடங்கு, பொட்டு, புட்டு, ஒடியற்கூழ், காசு உழைக்கும் கோயில்களும் தான். வீண் வெளிவேடங்களில் நேரத்தைக் காசைச் செலவிடும் எங்களால் உண்மையாகவே ஒரு தனித்துவமான கலையைக் காட்சிப்படுத்த முடிவதில்லை. எதையும் கற்றுக் கொள்ளாதவர்களாகவே இருக்கின்றோம்.

இந்தியத்
தமிழ்ச் சினிமாப் பாடல்களோ, அவற்றைப் பார்த்த விளைவால் ஆடும் மேலைத்தேய நடனங்களோ ஏனைய நாட்டவர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுவதில்லை. ஒருவர் துள்ளிசையான தமிழ்ச் சினிமாப் பாடலைப் பாடிய போது ஸ்பானிஷ் இசையின் சாயல் அடிப்பதாக அவ்விடத்திலேயே சுட்டிக்காட்டியதும் நடந்தது. அவர்களுக்குத் தமிழ் மொழி தெரியாது என்ற காரணத்தினால் ஓர் சினிமாப்பாடலைப் பாடி ஏமாற்ற முடியாது. அவை பாரம்பரியக் கலைகளினின்று விலகி நிற்பது இலகுவாகப் புலப்பட்டுவிடும்.

அங்கே
கையில் எழுதி வைத்திருந்த பாடலொன்று தமிழ்ப் பெண்கள் ஐந்து பேரால் பாடத் தொடங்கப்பட்டது. அனைவரும் நாற்பத்தைந்து ஐம்பது வயதை அண்மித்தவர்களாகவே இருப்பார்கள். நான் இவர்களை விட்டுச் சற்றுத் தூரத்தில் அமர்ந்திருந்தேன். சுராங்கனி….சுராங்கனிஎன்ற பாட்டைத் தவிர என் வாயிலும் ஒன்றும் வரவில்லை என்று குழம்பிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்ன பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர் என்பதையே பாடலைப்பாடும் இசையை வைத்துக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் , ஐந்து பேரிடமும் சிக்குப்பட்டு மாம்பழமாம்மாம்பழம் என்ற வார்த்தைகள் வெளிவருவது காதுகளில் தெளிவாக விழுந்தது. அவர்கள் பாடிய விதம் சின்னவயதில் தடக்கித் தடக்கிப் பாடும்மாம்பழமாம் மாம்பழம் மாமா தந்த மாம்பழம்போன்றிருப்பதாக என் ஊகம்.

ஓகோ! இவர்களும் என்னைப் போலவே வெறுத்துப் போய் வெட்கித்துத் தம்மை தாமே கிண்டல் செய்து பாடுகின்றார்களோ என்ற நினைப்பில் அவர்களுடன் சேர்ந்து அப்பாடலைப் பாடும் ஆசையுடன் எழுந்தோடினேன். இப்படிக் கிண்டலாகவாவது பாடச் சிந்தித்திருக்கிறார்களே என்று ஒரு புறம் அவர்களிடம் மதிப்பும் ஏற்பட்டது. அப்பாடலில் புதிதாக நுழைக்கப்பட்ட வார்த்தைகளை எழுதி வைத்திருக்கிறார்கள் என நினைத்து அந்தக் கடதாசியில் எழுதியிருந்தவற்றைப் படித்த போது தான் உண்மையாகவே அது என்ன பாடலென அடையாளங் கண்டு கொண்டேன். போன வேகத்தில் திரும்பி ஓடிவந்து என் பழைய இடத்தில் இருந்து விட்டேன்.

அது போக்கிரி படத்தில் விஜய்,அசின் வாயசைத்துப் பாடி ஆடிய , ‘மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் .சேலத்து மாம்பழம் நீதானடி! ‘ அந்தப் பாட்டின் மெட்டையாவது சரியாகப் பாடியிருந்தால் அல்லது வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்திருந்தால் நான் ஏமாந்து போயிருக்க மாட்டேன்.

இவ்வாறு தான் நம் போலிக் கலாச்சாரக் கதைகள் இருக்கின்றன. மக்கள் உள்வாங்கித் தம் திறமைகளை வெளிப்படுத்தவோ எதுவுமில்லை. மனமகிழ்ச்சியளிக்கும் பாரம்பரியக் கலைகளைக் கலைஞர்களை அழித்து விட்டும் அக்கறையற்றும் இருப்பது பற்றி உணராமல் பெண்களை முடக்கும் சடங்குகள், பழக்கங்கள், பண்பாடு எனப் பாதுகாக்கச் சட்டம் போடுவதும் சதிசெய்வதும் சிறிதும் தவறாகப் படுவதில்லை என்பது தான் வருந்தச் செய்கிறது.

No comments: